இலங்கைக்கு அனைத்து கட்சி குழுவை இந்தியா அனுப்ப முடிவு

Posted 8:07 AM by S R E E in லேபிள்கள்: ,

இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய, இந்த மாத இறுதிக்குள் அந்த நாட்டுக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இலங்கை அகதி முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு இதுவரை இந்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக தமிழக அரசால் முதலில் அனுப்பப்பட்ட 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவு மற்றும் துணிகளும், 2 வது முறையாக 2 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவு, துணிகள் மற்றும் பாத்திரங்களும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் அளிக்கப்பட்டு உள்ளன.

மேலும் இந்திய அரசின் சார்பாக 2 முறை தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. விரைவில் போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் செயற்கை கை மற்றும் கால்களை பொருத்தும் வகையில் பிரபல ஜெய்ப்பூர் செயற்கை கை, கால் தயாரிக்கும் நிறுவனத்தின் மருத்துவ குழுவை மத்திய அரசு அனுப்புகிறது. இந்த மருத்துவ குழு சுமார் 7 ஆயிரம் பேருக்கு செயற்கை கால் மற்றும் கைகளை பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு அகதி முகாம்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு குடி பெயரும் வகையில் அவர்களது இல்லங்களை சரி செய்யவும், தேவையாகும் பட்சத்தில் புதிய வீடுகள் நிர்மாணிக்கத் தேவையான சுமார் 2,600 மெட்ரிக் டன் வீடு கட்டும் பொருட்களை இந்திய அரசு ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது.

இதேபோல் மேலும் கூடுதலாக 2,600 மெட்ரிக் டன் வீடு கட்டும் பொருட்களை அனுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்தியாவின் சார்பாக சர்வத்ரா மற்றும் ஹாரிசன் என்ற அமைப்புகளை இந்திய அரசு சார்பாக ஈடுபடுத்தி உள்ளது.

இந்த குழுக்களை கடந்த ஜுலை மாதத்தில் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. மேலும் 3 குழுக்களை விரைவில் அனுப்ப உள்ளது.

குழந்தைகளின் கல்விக்கு தேவையான கணினிகளையும் இந்திய அரசு வழங்க முன்வந்துள்ளது. போரினால் கணவர்களை இழந்த இலங்கை தமிழ் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், மேலும் அவர்கள் சுயமாக தங்களது வாழ்க்கையை நடத்த அனைத்து உதவிகளையும் சேவா என்ற அமைப்பின் மூலமாக வழங்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் உண்மை நிலைமையை கண்டறியும் வகையில் இந்திய அரசு இந்த மாத இறுதிக்குள் அரசியல் கட்சி உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்த குழுவில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளிவர உள்ளது. இந்த குழுவில் இந்திய அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்.

இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 1974 மற்றும் 1976 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கச்சத்தீவு பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை இல்லை. இந்திய அரசை பொறுத்தவரை இந்த பிரச்சினை முடிந்துபோன பிரச்சினை. திரும்ப இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிடாது.

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பது குறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு எடுக்க வேண்டும். இப்பிரச்சினையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த பங்கும் கிடையாது.

மேற்கண்ட தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.



0 comment(s) to... “இலங்கைக்கு அனைத்து கட்சி குழுவை இந்தியா அனுப்ப முடிவு”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails