கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமை இல்லை : உயர் அதிகாரி தகவல்

Posted PM 1:39 by S R E E in லேபிள்கள்: ,
""கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடையாது. அந்த தீவில் மீன்வலை உலர்த்தவும், ஓய்வு எடுக்கவும், மாதா கோவில் விழாவில் பங்கேற்கவும் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலையை பார்வையிட விரைவில் எம்.பி.,க்கள் குழு அனுப்பப்படும்,'' என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

டில்லியில் தமிழக பத்திரிகையாளர்களிடம் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் நேற்று பேசும்போது, இலங்கை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இந்த விஷயங்கள் குறித்து அவர் கூறியதாவது: இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப் பட்டுள்ளன. மேலும், போர் நடந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதனால் தான் மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கை தாமதமாகிறது. கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படும் வரை, குடியேற்றத் திற்கு சாத்தியமில்லை. கண்ணிவெடி அகற்றப்படுவது குறித்த காலக்கெடு எதுவும் கூறிவிட முடியாது. முகாம்களை பார்வையிட எம்.பி.,க்கள் குழு செல்வது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அது முழுக்க முழுக்க அரசியல் நடவடிக்கை. அரசியல் கட்சித் தலைவர்களா எல்லது எம்.பி.,க்களா அல்லது எம்.எல்.ஏ.,க்களா என்ற விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு மூன்று உரிமைகள் தான் உள்ளன. மீனவர்கள், கச்சத்தீவில் வலையை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வெடுத்துக் கொள்ளலாம், அங்குள்ள மாதா கோவில் விழாவில் பங்கேற்கலாம். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை வழங்கப்படவில்லை. மீன்பிடித்தல் தொடர்பாக இந் தியா போட்டுள்ள ஒப்பந்தப்படி தற்போது அனைத்து நடவடிக்கைகளும் கையாளப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துவிட்டன. ஒரு சில உயிரிழப்புகள் நடந்தன. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழர்களை அவரவர் இடங்களில் குடியேற்றுவது சாத்தியமில்லாத ஒன்று. தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து இலங்கை அரசும், தமிழர்கள் பிரதிநிதிகளும் பேசிக் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் இந்தியா தரப்பில் போதிய ஒத்துழைப்பும் உதவியும் மட்டுமே வழங்க முடியும்.

ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கையும் இணைக்க வேண்டும். ஆனாலும் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். தமிழர்கள் வசித்துவந்த பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் நடக்கிறது என்பதை ஏற்கமுடியாது. இவ்வாறு அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

thanks : dinamalar



0 comment(s) to... “கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமை இல்லை : உயர் அதிகாரி தகவல்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails