சிறீலங்காத் துணைத் தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்: வைகோ
Posted 8:43 PM by S R E E in லேபிள்கள்: அறிக்கை, ஈழ செய்திகள், தமிழகச் செய்திகள்
சிறீலங்காத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி எனும் நபர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஆணவத் தோடும், அகம்பாவத்தோடும், திமிரோடும் இந்திய நாட்டையும், தமிழக மக்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணி வாய்க்கொழுப்பை வழிய விட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள வல்லரசு நாடுகளின் தூதர்கள் கூட இதுவரை இப்படி ஏளனமாகவும், எகத்தாளமாகவும் கருத்து கூறியதில்லை. அமெரிக்காவிலே உள்ள இந்தியத் தூதர் ரோனன் சென் இந்திய தலைவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் துச்சமாகப் பேசியதைக் கண்டித்து கொந்தளிப்பு ஏற்பட்டதில் அவர் மன்னிப்புக் கேட்டார்.
கடந்த 20 நாட்களுக்குள் 7 தடவைகள் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை நமது கடல் எல்லையில் தாக்கி இருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக கூறுவது பொய்ச் செய்தி என்றும், அப்படி நடக்கவே இல்லை என்றும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அக்கிரமமாக கூறியுள்ளதோடு, கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையே இல்லை என்றும், நமது மீனவர்களை இலங்கை கடற்படை பாதுகாக்கிறது என்றும் கிண்டலாகக் கூறி உள்ளார்.
இந்தியக் கடற்படைக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது என்றும் கூறியுள்ளார். தமிழ் இனத்தையே இழிவுப்படுத்தும் விதத்தில் ஏளன வார்த்தைகள் வீசிய துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை பகிரங்க மன்னிப்புக் கேட்கச் செய்வதோடு உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
-
0 comment(s) to... “சிறீலங்காத் துணைத் தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்: வைகோ”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக