சந்திரிகாவின் மகன் விமுக்தி தீவிர அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை:

Posted பிற்பகல் 3:47 by S R E E in லேபிள்கள்:
சந்திரிகாவின் மகன் விமுக்தி தீவிர அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை: செய்திகளை மறுக்கின்றார் மங்கள சமரவீர.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க புதிதாக உருவாக்கப்படும் எதிரணிக் கூட்டணி மூலமாக தீவிர அரசியலில் பிரவேசிக்கப்போவதாக வெளியான செய்திகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மறுத்துள்ளார்.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவையும், அவரின் மகன் விமுக்தி குமாரதுங்கவையும் புதிதாக உருவாக்கப்படும் எதிரணியின் விரிவான கூட்டமைப்பின் மூலமாக அரசியலுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்படுவதாக வெளியான செய்திகள் தொடர்பாகக் கேட்டபோதே மங்கள சமரவீர அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார்.

ஐ.தே.க. தலைமையிலான கூட்டணி அமைப்பது தொடர்பான செற்பாடுகள் எந்தளவுக்கு உள்ளன என்பது தொடர்பாகக் கேட்டபோது, அது தொடர்பான முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், வெகுவிரைவில் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளையில், இந்த உத்தேச அரசியல் கூட்டணியை அமைத்துக்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.தே.க.வின் செயற்குழுவின் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றது.

தொடக்க கட்டத்தில் ஐந்து அரசியல் கட்சிகள் இந்தக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளவிருக்கின்றன. பின்னர் சிறிய கட்சிகள் பலவும், குடிசார் அமைப்புக்கள் சிலவும் இதில் இணைந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துக்கொள்ளவிருக்கும் கூட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்துக் கட்சிகளும் அதற்கான அங்கீகாரத்தை வழங்கிய பின்னர் அது கைச்சாத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் கொள்கைப் பிரகடனம் ஒன்று வெளியிடப்படும் எனவும், அது மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் எதிரணிக் கூட்டமைப்பின் தலைவர்கள் கொழும்பில் இருந்து பாரிய ஊர்வலமாக கண்டிக்குச் சென்று இந்த கொள்கைப் பிரகடனத்தை மகாநாயக்கர்களிடம் கையளிப்பார்கள்.
0 comment(s) to... “சந்திரிகாவின் மகன் விமுக்தி தீவிர அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை:”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails