ராஜபக்சே, கோத்தபயா போர்க் குற்றவாளிகள் - திருமாவளவன் அறிக்கை

Posted முற்பகல் 11:13 by S R E E in லேபிள்கள்: , ,
இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்.பி குழுக்களில் ஒருவரான விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் 19.10.2009 அன்று வெளியிட்ட அறிக்கை.


மிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் ஈழத் தமிழர்களின் வாழ்நிலைகளை நேரில் சென்று கள ஆய்வு செய்தது. யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள வதை முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை இக்குழு நேரில் சந்தித்தது. அத்துடன் தமிழினத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்தது. மலையகப் பகுதிகளுக்கும் சென்று இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலைமைகளையும் இக்குழு ஆராய்ந்தது. நிறைவாக, சிங்கள ஆட்சியாளர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து அவர்தம் கருத்துக்களையும் அறிந்தது. 14Š-10Š-2009 அன்று மாலை சென்னை திரும்பிய இக்குழு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் தமது ஆய்வறிக்கையை அளித்தது. தமிழக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் முன்கூட்டியே பரப்பிவிட்ட அவதூறுகளுக்கு மாறாக, அந்த அறிக்கை ஈழத் தமிழர்களின் அவலங்களை உள்ளது உள்ளபடியே உண்மைகளை வெளிப்படுத்தியது. இக்குழு மேற்கொண்ட பயணத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இறுக்கம் நிறைந்த மமதைப் போக்கில் சிறிய அசைவும் தளர்வும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்களையோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களையோ சர்வதேச அளவிலான மனிதஉரிமை ஆர்வலர்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்காமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இரும்புத் திரையிட்டு சிங்கள ஆட்சியாளர்களால் மூடி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை முதன்முறையாக இக்குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. வதைமுகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே இராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது. மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன. அகில உலகத்தையே வியக்க வைத்த Š அதிர வைத்த வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எம் தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தமது உறவினர்களைச் சந்திக்கக்கூடப் போக முடியாதபடி முள்வேலிக் கம்பித் தடுப்புகளும் இராணுவத்தின் கெடுபிடிகளும் வாய் திறக்க முடியாத வகையில் அவர்களை வாட்டி வதைக்கிறது. மெலிந்த நலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரைதாரையாய் நீர் கொட்டுவதைக் காண முடிகிறது. இரு கைகளையும் கூப்பிக் குனிந்து கும்பிடு போட்டு, ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா!'' என்று கண்ணீரைக் கொட்டியபடி சிலர் கதறி அழுதனர். இரண்டு பேர் மட்டுமே படுத்து எழக்கூடிய கூடாரங்களில் எட்டுப் பேர், பத்துப் பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டைச் சொற்களால் விவரிக்க முடியாது. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத பெரும் கொடுமையாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு ஈழத்தில் நடக்கும் சிங்கள இராணுவ ஆட்சியின் அரச வன்கொடுமைகளை உலகரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு சிங்கள அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ. 500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வதைமுகாமில் சிக்கி அவதிப்படுவோரை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்பதும், அவர்தம் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்பதும் இன்றியமையாத ஒன்று என்றாலும், தவிர்க்க முடியாத உடனடித் தேவைகள்தான் என்றாலும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அத்தகைய இனவெறியாளர்களை தண்டிக்க வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த வகையில் நெஞ்சிலே ஈரமில்லாத ஈவிரக்கமேயில்லாத சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, இராஜபக்சே சகோதரர்களை சர்வதேசப் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும் சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனவும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 22-10--2009 அன்று சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தத் தமிழர்களும் மனிதநேய ஆர்வலர்களும் மேற்சொன்ன இரு கோரிக்கைகளை மையப்படுத்தி சர்வதேசச் சமூகத்தை தொடர்ந்து வற்புறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல் .திருமாவளவன்
.


0 comment(s) to... “ராஜபக்சே, கோத்தபயா போர்க் குற்றவாளிகள் - திருமாவளவன் அறிக்கை”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails