டெல்லி தூதரகம் மீது தாக்குதல் - இலங்கை அதிர்ச்சி - இந்தியா வருத்தம்

Posted 8:56 AM by S R E E in லேபிள்கள்: ,
டெல்லி: புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்திற்குள் புகுந்து நடத்திய தாக்குதலால் இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனத் தூதரகத்திற்குத் தரப்படுவதைப் போன்ற பலத்த பாதுகாப்பு தங்களது தூதரகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என அது கோரியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் சில மாதங்களுக்கு முன்பு லேசான தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியினர் துணிகர தாக்குதலை நடத்தியுள்ளனர். 40 முதல் 50 பேர் அடங்கிய புதிய தமிழகம் கட்சியினர் திடீரென தூதரகத்திற்குள் நேற்று புகுந்து நடத்திய தாக்குதலால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று ஜந்தர்மந்தர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நேற்று இலங்கைத் தமிழர்களை மறு குடியேற்றம் செய்ய வேண்டும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கி வருவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், யாதவ மகாசபை ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் இல்லம் நோக்கி அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அதை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கூட்டத்திலிருந்து ஒரு பிரிவினர் அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குள் தடாலடியாக புகுந்தனர்.

அங்கு கண்ணில் பட்ட பொருட்களை தாக்கி சேதப்படுத்தினர். கல்வீச்சு நடத்தி கண்ணாடி ஜன்னல், கதவுகள், பூத்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.

அங்கு குறைந்த அளவே போலீஸார் பாதுகாப்புக்கு இருந்ததால் அவர்கள் சுதாரித்து வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், டிவி கேமராமேன்கள் படம் பிடித்தனர். அதைப் பார்த்த தூதரக அதிகாரிகள், அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்துமாறு போலீஸாரிடம் கூறினர். இதையடுத்து போலீஸார், பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்த முயன்றதால் அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தூதரகத்தில் குறைந்த அளவே ஊழியர்கள் இருந்ததால் யாருக்கும் காயம் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தால் தூதரக ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வருத்தம்...

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவிக்கையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தூதரகம் மீதான தாக்குதல் வன்முறைச் செயலாகும்.

தகவல் அறிந்ததும் போலீஸார் உடனடியாக பாதுகாப்புப் பணியில் இறங்கினர். தூதரக வளாகத்தில் தற்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு திபெத் போராட்டக்காரர்கள் சீனத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் டெல்லியில் ஒரு நாட்டுத் தூதரகம் மீது நடந்துள்ள தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து தூதரகத்தின் முதல் செயலாளர் குணரத்னே கூறுகையில், நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்திடமும், டெல்லி காவல்துறையிடமும் எடுத்துக் கூறியுள்ளோம்.

40 முதல் 50 பேர் வரை தாக்குதல் நடத்தினார்கள். தமிழர்களைப் போல இருந்தார்கள். இலங்கை அரசைக் கண்டிக்கும் தட்டிகளை கையில் வைத்திருந்தனர்.

விடுமுறை என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லை. பல பூத் தொட்டிகளையும், கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர் என்றார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தாங்கள் வருவதற்குள் அனைவரும் தப்பி ஓடி விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி கூடுதல் ஆணையர் தாஸ் கூறுகையில், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. எல்லாமே 2 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. இதில் யாரும் காயமடையவில்லை. போலீஸார் சுதாரிப்பதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டதால் யாரையும் கைது செய்ய முடியவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அவர்கள் வரும்போதே, டிவி செய்தியாளர்களையும் உடன் அழைத்து வந்துள்ளனர். டிவி வீடியோ படங்களைப் பார்த்து தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம் என்றார்.


0 comment(s) to... “டெல்லி தூதரகம் மீது தாக்குதல் - இலங்கை அதிர்ச்சி - இந்தியா வருத்தம்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails