இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வவுனியாவிலுள்ள முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப ஓரளவு நெருக்கமாக அமைந்துள்ளன. அங்கு பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. அங்கு வாழ்கின்றவர்கள் தங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்களே தவிர, வேறெதனையும் கேட்கவில்லை என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் குழுவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இலங்கையில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளான தமிழர்கள், பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவிப்பதாக பல்வேறு தகவல்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டன. அந்த தகவல்கள் உண்மையானவையா? என்பதனை நேரடியாக கண்டறிவதற்கே வருகைதந்தோம் என்றும் அவர் சொன்னார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்களை அவர்கள் மலையகத்திற்கு விஜயம் செய்கின்ற வேளையில் கேசரி நாளிதழுக்காக நேர்காணல் செய்வதற்கு முயற்சித்தோம், நெருக்கமான நிகழ்ச்சி நிரல் என்பதனால் ஒவ்வொரு வைபவத்திலும் ஐந்து, பத்து நிமிடங்களை மட்டுமே செலவழித்தனர். எனினும் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான விஜயத்தின் போது காலை உணவையும் உட்கொண்டு இரண்டொரு மணித்தியாலம் அங்கிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான தொரு நிலையிலேயே காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பனை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர் குறுகிய நேரத்திற்குள் கேசரி நாளிதழுக்காக வழங்கிய செவ்வியின் விபரத்தை கேள்வி பதிலாக தருகின்றோம்.

இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?

நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?

சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.

நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?

மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.

உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.

தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?

தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?

நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?

பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?

அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?

பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.

நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?

நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?

பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?

பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.

மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .

மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார்.

.

கடந்த மே மாதம் 18ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைய வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினரை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொன்றதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல்களுக்கமைய, மே 18ம் திகதி அதிகாலை 58வது படைப்பிரிவின் அந்நாள் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் சிவேந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, போர்க் கைதிகளை வைத்துக் கொள்வது அரசாங்கத்திற்கு தேவையற்ற விடயமெனவும் வெள்ளைக் கொடியுடன் அல்லது கொடியின்றி வரும் எந்தவொரு தரப்பினரையும் தராதரம் பாராது சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் 18ம் திகதி பிற்பகல் பரந்தன் ‐ முல்லைத்தீவு வழியாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மேலும் சர்வதேச அமைப்பொன்றும், வெளிநாட்டு தூதரகமொன்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித கோஹன, ஜனாதிபதி சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவித்த பின்னரே புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றுள்ளனர்.

இதேவேளை யுத்த நடவடிக்கைகளுக்குரிய ஆயுதங்கள் குறித்து ஆராயும் நோக்கில் சீனா சென்றிருந்த அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 18ம் திகதி மதியமே நாடு திரும்பியிருந்ததாகவும் இராணுவத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினரை சந்தித்து, அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை. தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ரி.ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது சாத்தியமான கிட்டவில்லை.

தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் “”நோ கொமன்ட்ஸ்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கட தமிழகத்தில் அதிக குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தப்போது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓரிரு வார்த்தைகளை கூறினால் அவர் கூறுகையில்,

முகாம்களில் இருக்கும் அகதிகள் தங்களை உடனடியாக மீளவும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமுமே தீர்மானிக்கும் என்றார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் முகாம்களிலுள்ள மக்கள், தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் விடுத்த கோரிக்கை என்ன? அதனை இந்தக் குழு விரைவாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கேட்டபோது, முகாம்களை அவதானித்தோம். நேரில் கண்டதை மிக விரைவில் அறிக்கையிட்டு தமிழக அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம்.

முகாம்களில் வாழ்கின்ற மக்கள் நிவாரணப் பொருட்களைக் கேட்க வில்லை. தமது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் என்றார். மேலும் அவரிடம் விபரம் அறிய முயன்றபோது, மேலதிக விபரங்களை தொலைபேசியூடாக தெரிவிப்பதாக கூறினார்.

.


மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு – எழுத்துருவாக்கம் தொகுப்பு ‐ GTN

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் மாட்டியுள்ளது. கேள்விப் பத்திர நடைமுறைகளையெல்லாம் மீறி தனது உறவினருக்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை வழங்கியுள்ளது.

கொரியாவைச் சேர்ந்த சம்சுங் கோப்ரேசனின் இலங்கைப் பிரதிநிதி முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஸவின் உறவினர் என்பதால் கேள்விப் பத்திர ஒப்பந்த நடைமுறைகளை மீறி இவ்வொப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் எண்ணப்படி இலங்கையின் இலத்திரனியல் அரசாங்க வலைத் தொடர்பை வலுப்படுத்துவதற்காக பல மில்லியன் தொடர்பான இவ்வொப்பந்தம் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது.

எல்லா அரச நிறுவனங்களையும் ஒரே கணனி வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதற்காக 15 மில்லியன் டொலர் பெறுமதியான இவ்வொப்பந்தம் 2005 ஆம் ஆண்டு ஜுலை 6ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. கொரிய நிறுவனமொன்றுக்கு இத்திட்டம் வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் இந்நிதி கொரியாவிலுள்ள இறக்குமதி ஏற்றுமதி வங்கியால் வழங்கப்பட்டிருந்தது.

கொரியாவைச் சேர்ந்த சம்சுங் நிறுவனமும் கொரிய ரெலிகொமும் இதற்கான கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பித்திருந்தன. கொரிய ரெலிகொமை விட சம்சுங் நிறுவனம் அதிக விலைகோரலைக் குறிப்பிட்டிருந்தும் கூட சம்சுங் நிறுவனத்திற்கே அவ்வொப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
2006 ஓகஸ்டில் 14.8 மில்லியன் டொலர்களுக்கான இவ்வொப்பந்தம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குக் கீழ் வரும் ஐ.சி.ரி.ஏ எனும் தகவற் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், சம்சுங்கின் இலங்கை ஏஜன்டான அஸ்ஸற் நெற்வேர்க்குக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

தகவல் தொடர்பாடற் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அஸ்ஸற் சார்பில் டில்சான் விக்கிரமசிங்கவும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த டில்சான் விக்கிரமசிங்க முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஸவின் மருமகனாவார்.

ஓப்பந்தம் முறைகேடாக வழங்கப்பட்டது மட்டுமன்றி ஒப்பந்த விதிகள் கூட முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஒப்பந்தத்தில் உள்ளதற்கு மாறாக மிக மலிவான தரம் குறைந்த உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அப்பொருட்களை இலங்கையில் அதனிலும் பார்க்கக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கிறது.

உள்நாட்டமைச்சின் கீழ் வரும் இரண்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் இவ்வுபகரணங்கள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. உதாரணமாக 123 சென்றல் யுபிஎஸ்கள் தலா ஒவ்வொன்றும் 1598.29 டொலர் பெறுமதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் இதனைவிடத் தரம் வாய்ந்த யுபிஎஸ்ஸை 800 டொலருக்குக் கொள்வனவு செய்ய முடியும்.

அதேபோல் 3225 செல்ரோன் கொம்பியூட்டர்கள் தலா 1394.19 டொலர்ப்படி கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதே பொருளை இலங்கையில் 350 தொடக்கம் 400 டொலருக்குள் வாங்க முடியும்.

1175.19 டொலரின்படி 325 கார்ட் டிஸ்க் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் சராசரியாக இதனை இலங்கையில் 350 டொலருக்கு வாங்கலாம். இதேபோல் 325 எச்.பி ஸ்கானர்( மொடல் ‐ 8200) 519 டொலர்ப்படி வாங்கப்பட்டிருக்கிறது. அது இலங்கையில் 254 டொலர் ஆகும்.

யுபிஎஸ், ரவுட்டர், எக்ஸ்.பி, கொம்பியூட்டர் போன்றவை ஓப்பந்தத்தில் குறிப்பிட்ட தரத்தின்படி அமைந்திருக்கவில்லை. இவை ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதாக உள்ளன.

இவை தொடர்பான எவ்விதக் கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. முதற் பெண்மணியின் மருமகன் என்ற காரணத்தினால் இவை தொடர்பாக வருகின்ற குற்றச்சாட்டுக்கள் கூட கவனத்தில் கொள்ளப்படாது புறக்கணிக்கப்படுகின்றன.
தகவல்: சண்டே லீடர்

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளருக்குச் சொந்தமான வானொலி 400 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது?
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூனுகல்லவிற்குச் சொந்தமான சத் எவ்.எம். வானொலியை பாகிஸ்தானியர் ஒருவருக்கு 400 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது குறித்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆணைக்குழுவின் அனுமதியின்றி வானொலிக்கான அனுமதிப் பத்திரத்தை வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய முடியாது. லக்ஸ்மன் ஹூனுகல்லவிற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரமானது செட் நெட் பிரைவட் லிமிட்டட் என்ற நிறுவனத்தினால் சத் எவ்.எம். வானொலி கடந்த காலங்களில் இயங்கிவந்தது.

இந்த நிலையில் லத் எவ்.எம். வானொலிக்கான அனுமதிப்பத்திரத்தைக் கொள்வனவு செய்துள்ள பாகிஸ்தானியர் தெற்காசியப் பிராந்தியத்தில் பிரபல வர்த்தகர் எனவும் ஆசிய பிராந்தியத்தில் அவரை எக் போஸ் என்ற புனைப் பெயரிலேயே அழைப்பதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இந்த நபர் அல் கைதா அமைப்புடன் சம்பந்தப்பட்டிருப்பதாக அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. குறித்த பாகிஸ்தானியர் இலங்கையில் வசித்துவருவதாகக் கூறிப்படுகிறது.

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் எவ்வித தேவைகளையும் மேற்கொள்ளாது மக்களின் பணத்தை கொள்ளையிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதியின் புதையலாக மாறியுள்ளது?

ஈ‐ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதியின் உறவினர்களின் புகலிடமாக மாறியுள்ளதுடன், ராஜபக்ஷகளின் புதையலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஈ‐ஸ்ரீலங்கா திட்டம், சீ….ஸ்ரீலங்காத் திட்டமாக மாறியுள்ளதாக ஊழல்தொடர்பான தகவல்களை வெளியிட்டுவரும் இணையத்தளம் ஒன்று ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இந்த இணையத்தளம் ஈ‐ஸ்ரீலங்கா திட்டத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகளை வெளியிட்டிருந்தது. கணனிகளைக் கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திரக் கோரல், கணனிகளைத் தெரிவுசெய்வது போன்றவற்றிலும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தன.

ஸ்ரீலங்கா திட்டமானது அரச அலுவலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்தும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அரச அலுவலகங்கள் தொடர்ந்தும் முன்னைய பாணியிலேயே தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இலங்கை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், தொழில் நீதிமன்றம் உள்ளிட்ட 350 நிறுவனங்கள் இதுவரை கணனிமயப்படுத்தப்படவில்லை.

சில நீதிமன்றங்களில் இரண்டு அல்லது மூன்று கணனிகளே உள்ளன. போதுமான கணனிகள் இருக்குமாயின் நீதிமன்றப் பணிகளை தற்போதுள்ளதைவிட விரைவு படுத்த முடியும். இதனைத்தவிர ஆட்பதிவுத் திணைக்களத்திலும் கையால் எழுதியே ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.இதன்காரணமாகவே அடையாள அட்டையொன்றை விநியோகிக்க ஆறு மாதகாலத்திற்கு மேல் செல்கிறது.

இந்தத் திணைக்களத்தின் பணிகளை கணனிமயப்படுத்தியிருந்தால், அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியிருக்கலாம். இவ்வாறான பணிகளைச் செய்ய வேண்டிய ஈ‐ஸ்ரீலங்கா திட்டத்தினர் மக்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட்டு வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

October 12, 2009

தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 90 வீதமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைப்போம் எனக் கூறிய அரசாங்கத்தின் இந்த சரிவானது எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி வந்துள்ளதால் 1300 மில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் தென் மாகாண சபைத் தேர்தலில் பாரிய அளவு அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து கூறுகையில், ஜனாதிபதியின் குடும்ப அரசியலுக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான அரசின் செயற்பாட்டிற்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். தென் மாகாண மக்களின் இந்தத் தீர்ப்பு ஏனைய மாகாண மக்களுக்கும் தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ வெற்றியையும் தென் மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டத் திட்டங்களையும் முன்வைத்தே அரசாங்கம் இந்தத் தேர்தலில் களமிறங்கியது. இதன் மூலம் பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு வாக்குகளை அரசாங்கத்தால் பெற முடியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி பிறந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விட இத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பெறப்பட்டுள்ளன.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தின் முழுப் பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வந்தனர். இதன்போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட அமைச்சர்கள் பலரும் அரசாங்கம் 90 வீதமான வாக்குகளைப் பெற்று பாரிய வெற்றியீட்டும் என தொடர்ச்சியாக கூறி வந்தனர். ஆனால், அவர்கள் கூறிய இலக்கை நெருங்கக் கூட முடியாமல் போயுள்ளது.

இந்த மாகாணத்தில் பாரிய அளவு தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று கூட கட்டவுட், பெனர், போஸ்டர் என தேர்தல் விளம்பரங்கள் நீக்கப்படாமல் இருந்தன. 7 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன என அறிவிக்கப்பட்ட போதிலும் 9 ஆம் திகதி வரை அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயல்படும் இவர்களால் மக்களை சட்டத்தை மதித்து செயல்படுமாறு எப்படிக் கூற முடியும்? மக்கள் இப்போது தெளிவடைந்துள்ளார்கள். தொடர்ந்தும் இவர்களால் மக்களை ஏமாற்ற முடியாது. இவர்களின் ஏமாற்று வித்தைக்கான பரிசினை மக்கள் வழங்குவார்கள். அதற்கான ஆரம்பமே தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள். ஜனாதிபதிக்கு நன்றி செலுத்தும் முகமாக தென் மாகாண மக்கள் 90 வீதமான வாக்குகளை வழங்கி அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேட்டிருந்தார். ஆனால், மக்கள் இதனை நிராகரித்துள்ளார்கள். ஜனாதிபதி இந்த மாகாணத்தில் தங்கியிருந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அது மாத்திரமல்லாமல் அந்தக் காலங்களில் அமைச்சரவை ஒன்றுகூடலையும் தென் மாகாணத்தில் கூட்டியிருந்தார். இதன் மூலம் வீண் செலவுகளை செய்திருக்கின்றார். இந்த ஒன்றுகூடல்களுக்கான தண்ணீர் போத்தல்கள் கூட வானூர்தியின் மூலமே கொண்டு செல்லப்பட்டன. துறைமுகத்தில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக தென் மாகாணத்தில் இலட்சக்கணக்கான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறான போலி உறுதி மொழிகள் மூலம் பாரிய வெற்றி பெறலாம் என கனவு கண்டது. இதனை இனங்கண்டு கொண்ட மக்கள் அதற்கான தக்க பதிலை வழங்கியுள்ளார்கள். அரசாங்கம் கூறுவதைப் போல மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. எனவே அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இலங்கைத் தமிழர்கள், அவர்களுக்கு உரிய, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சகல உரிமைகளுடனும் சமமான குடிமக்களாக வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இங்கு வாழும் மக்கள் எத்தகைய நிலையில் உரிமைகளற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரில் அறிந்து கொள்ளவே நாம் இங்கு வந்துள்ளோம். இவ்வாறு நேற்று யாழ். சென்ற தமிழக நா.உ. கவிஞர் கனிமொழி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கைத் தமிழ் மக்கள் சம உரிமை உடையவர்களாக இங்கு வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம். நீங்கள் எங்களை இதமான உணர்வோடு வரவேற்றீர்கள். உங்களுக்காக உணர்வோடு பேசக் கூடிய ஒரு குழுவாக நாம் இங்கு வருகை தந்திருக்கிறோம்.

நீங்கள் இங்கு வைத்துள்ள கோரிக்கைகளையும் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் நாம் உறுதியாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு இருக்கக் கூடிய மக்களுக்கு ஒரு நாட்டுக் குடிமக்களாக அவர்களுக்கு வந்து சேர வேண்டிய நியாயமான உரிமைகளையும் நீதிகளையும் குடியுரிமைக்கான உரிமைகளையும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

இங்கு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இங்கு ஒரு ஜனநாயக சூழல் திரும்ப வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். அதுவே இந்தியாவின் விருப்பமாகவும் உலகத்திலே இருக்கின்ற ஏனைய தலைவர்களின் விருப்பமாகவும் இருக்கும்.

சுமுக நிலை இலங்கையில் மீண்டும் திரும்ப வேண்டும். தமிழர்கள் சம உரிமைகளுடன் சிறந்து வாழ வேண்டும் என்பதற்காக எங்களால் என்னென்ன முயற்சிகளை செய்ய முடியுமோ நிச்சயமாக ஒவ்வொரு கட்சி ரீதியாகவும் சரி இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் நாங்கள் செய்வோம் என்பதை உங்களிடத்தில் உறுதியாகக் கூறுகிறோம்.

உங்களின் எண்ணங்களை உறுதியாக நிச்சயமாக இந்திய அரசுக்கு எடுத்துக் கூறுவோம் என்றார்.

-

வவுனியா அகதி முகாம்களிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களையும் உடனடியாக சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதன் அவசியம் பற்றியும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் அரசு சிங்களக் குடியேற்றங்களையும், இராணுவ தளங்களையும் அமைக்க முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டியது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை வந்துள்ள தமிழக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. நேற்று மாலை “இந்தியன்’ இல்லத்தில் தமிழக அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசியது தொடர்பில் கருத்துத் தெவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இது பற்றி மேலும் தெவித்ததாவது,

மழை காலம் வருவதற்கு முன்னர் இந்த அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அனைவரையும் துரிதமாக விடுவிக்க முடியாதென்றால் அகதி முகாம்களிலுள்ள மக்கள் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணையில் எவ்வித குற்றம் செய்யாதோரென நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களையாவது உடனடியாக விடுவிப்பதுடன் ஏனையவர்களையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும்.

முகாமில் உள்ள மக்களை விடுவித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் அல்லது அவர்களது மாவட்டங்களில் தற்காலிகமாக திறந்தவெளி முகாம்களை உருவாக்கி அதில் தங்க வைத்து சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று இலங்கை அரசு சிங்களக் குடியேற்றங்களையும், இராணுவத் தளங்களையும் அமைக்க முயற்சிக்கிறது. இது முற்றாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அகதி முகாம்களிலுள்ள மக்கள் இன்று அடிப்படை வசதிகளின்றி கஷ்டப்படுகின்றனர். கடந்த மூன்று தினங்களாக குடிநீர்த் தட்டுப்பாட்டினால் பெரும் கஷ்டப்பட்டுள்ளனர். கிடைக்கக் கூடிய நீரும் மாசடைந்தே காணப்படுகிறது என்பன போன்ற விடயங்களையும் சுட்டிக் காட்டினோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அகதி முகாம்களையும் பார்வையிட வேண்டும். இந்த முகாம்களைப் பார்வையிட்ட பின் மீண்டும் தம்மைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று இயலுமாயின் இன்னுமொரு தடவை சந்திப்பதற்கு தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள் விருப்பம் தெவித்துள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவசக்தி ஆனந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஹம்மத் இமாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை சென்றுள்ள இந்திய (தமிழக) குழு இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சந்தித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவர்களிடம் கீழ் வரும் கோரிக்கையை விடுக்கின்றது.
-

ன்புக்குரிய தமிழக அரசியல் பிரதிநிதிகளுக்கு

உங்களுடைய வருகை எங்கள் மக்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இன்றைக்கு தமிழ் மக்கள் அவதியான காலத்திற்குள் சிக்குப்பட்டுக் கிடக்கிறார்கள். மிக பிரமாண்டமான முட்கம்பி வேலிகளுக்குள் அவர்கள் பெரிய ஏக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளை இங்கே உங்களால் பார்க்க முடிகிறது. உங்களிடத்தில் எங்களால் எல்லாவற்றையும் இப்படியான முற்றுகைத் தருணத்தில் பேசிவிட முடியாது. அப்படி ஒரு சூழல் எங்களுக்கு இல்லை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களது பயணம் எப்படியானது எதற்காக நிகழுகிறது என்பதைக்கூட அதன் சாட்சியத்திற்கு வலுத்தருகிற விதமாக அல்லது எங்கள் பாடுகளை சொல்லுகிற விதமாக கூட இந்த வாழ்வுச் சூழலும் இங்கு நடந்த உரையாடல் சூழலும் இல்லை என்பதுதான் எங்கள் துக்கமாக இருக்கிறது.

மிகவும் கொடுமையான யுத்தம் நடந்த பிறகு அதன் விளைவாக பெரியதாய் விளைந்து போய்க்கிடக்கிறது இன்றைய எமது மக்களின் துயரங்கள். எங்கள் மாணவர்கள் கால்களை, கைகளை, மனங்களை இழந்து யுத்தின் விளைபொருட்களாக இங்கு வந்திருக்கின்றார்கள். சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வியையும் மாணவத்தன்மையையும் முழுமையாக இழந்து கற்க முடியாத நிலையிலேயே வந்திருக்கிறார்கள். இதை யாரால், எப்படி ஈடு செய்ய முடியும்? இந்த விளைவுகளுக்கு எல்லோருமே காரணமாக இருந்தவர்கள். யுத்தம் முடிவடைந்தது உயிரழிவை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. போதும் என்ற வெறுப்பையும் உலகத்தால் கைவிடப்பட்ட கையறு நிலையையும் உணர்த்தியிருக்கிறது.

நடந்து முடிந்தவைகள் தொடர்பான விசாரணைகளைப் பற்றியும் அதற்கு காரணானவர்கள் மீதான குறை கூறுதலைப் பற்றியும் நாம் எதைப் பேசியும் பிரயோசனமில்லை என்றே நினைக்கிறோம். அது ஒட்டு மொத்த உலகம் அதன் ஒழுங்கு, அதிகாரம் பற்றிய சாமானிய சனங்களின் கேள்வியாக இருக்கும். இன்று இங்கு நீங்கள் பார்க்கப்போகிறவைகள் பற்றி நீங்கள் கலைஞர் அவர்களுக்கு என்ன அறிக்கை கொடுக்கப்போகிறீர்கள்? அவர் பிரதமருக்கு அதை அனுப்பி வைக்கும்பொழுது என்ன நடக்கப்போகிறது? என்ற கேள்விகள் அல்லது எதிர்பார்ப்பு எமக்கு இருக்கிறது. உண்மையில் எங்கள் மக்களுக்கு விமோசனம் தருகிற விடயங்கள் நடக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.

எமது மக்கள் யுத்த களத்தில் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்து விட்டு வந்து தற்போது முட்கம்பிச் சிறைக்குள் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத துயரத்தை அனுபவிக்கிறார்கள். எமது மக்களை உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தி சிதைந்த தேசத்தை அவிருத்தி செய்து இழந்த வாழ்வை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள். நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழவுரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்ற இரண்டு கோரிக்கைகளையும்தான் எமது மாணவர்கள் சார்பாக மக்களுக்காக உங்கள் முன் தருகிறோம்.

தமிழ் மக்களாக அவர்களின் மாணவர்களாக இருந்து கொண்டு இந்தக் கோரிக்கைகளையே உங்களிடம் முன் வைக்கிறோம். தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதாவது 30 வருடத்திற்கு மேலாக எல்லோருடனும் பேசிவருகிறோம். ஏமாற்றங்களும் படுதுயரங்களும்தான் எமக்கு கிடைத்திருக்கின்றன. தமிழகமும் இந்தியாவும் எமது மக்கள் விடயத்தில் வகித்த பாத்திரங்கள் முக்கியமானவை. அது எங்கள் மக்களின் 30 வருட கால போராட்டத்தில் எல்லாவிதமான மாற்றங்களுடனும் விளைவுகளுடனும் சம்பந்தப்பட்டவை.

இனி, அதாவது இன்றை இத்தகைய விளைவுகளின்பொழுது தமிழகமும் இந்தியாவும் இன்றைய ஈழ தமிழ் மக்கள் விடயத்தில் எப்படி செயற்படப்போகின்றது? எமது மக்களின் வாழ்வை மீளவும் அத்துடன் புதிதாகவும் கட்டியெழுப்பி இயல்பு வாழ்வொன்றுக்கு திரும்ப உங்களது நடவடிக்கை அல்லது உதவி எங்களுக்கு உடனடியாகவே தேவைப்படுகிறது.

நீங்கள் எங்கள் மக்களை போய்ப் பாருங்கள். எமது மாணவர்களின் பெற்றோர்களை சகோதரர்களை உறவினர்களை பாருங்கள். உண்மையில் எமது மக்களது நிலமை என்ன? என்பதையும் அவர்களுக்கு என்ன தேவை என்பதையும்? நேரடியாக கண்டு கொள்ளுங்கள். அவர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்? எங்கள் மக்களை இப்படி ஒரு நிலமையிலிருந்து எப்படி காப்பற்றாலம்? அதற்கு உங்கள் பங்கு என்ன வகையில் தேவைப்படுகிறது என்பதை உடனேயே செய்யுங்கள்.

வன்னி அகதிகள் எதிர்பார்த்திருக்கிற மாதிரி உங்களது சந்திப்பு மாற்றத்தை தந்து எமது மக்களை அமைதியான வாழ்வுக்கு திரும்ப உதவ வேண்டும் என்பதை மிகவும் அவசியமாக வலியுறுத்துகிறோம். எமது மக்களின் மாணவர்களாக இந்த கொடும் யுத்தம் நடந்த பூமியில் எங்கள் உள்ளார்ந்த அபிலாசைகளை அல்லது கோரிக்கைகளை உங்களின் வாயிலாக முழுத் தமிழக உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நன்றி.
இவ்வண்ணம்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

.

புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே. பியைக் கைது செய்ததன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலக நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளாரென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிப்பதாகக் கூறியே 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

சமாதானம் முறிவடையும் பட்சத்தில் யுத்த நடவடிக்கைகளில் பிரவேசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ஜனாதிபதி இந்தியாவுக்கான தனது முதலாவது விஜயத்தின் போது, இந்தியத் தலைவர்களிடம் கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியின் போதே மேற்கண்டாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி யுத்தத்தை நிர்ப்பந்திக்கவில்லை.

ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை அழித்துப் புலிகள் அமைப்பை மீளக்கட்டி எழுப்புவதற்கான சதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படுவது இந்த சதியின் ஒரு பகுதியாகும்.

ஜனாதிபதி தலைமையில் நானும் முப்படைத் தளபதிகளும் புலிகளை உறுதியான திட்டமிடலின் கீழேயே அழித்தோம்.

ஜனாதிபதி இந்தியாவில் வைத்து தெரிவித்ததைப் போன்றே செய்தும் காட்டி விட்டார். பலர் இது வெறும் வாய் வார்த்தையென்றே நினைத்திருந்தனர். ஆனால் அவர் அதனை அத்தோடு நிறுத்திவிடவில்லை.

புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே. பியைக் கைது செய்து மகத்தான வெற்றியை நிலைநாட்டியதன் மூலம் உலக நாடுகளையே அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டிருக்கும் கே. பியிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு பார்க்கையில், புலிகளின் வலைப்பின்னல் சர்வதேச நாடுகளிடையே விசாலமாக பரந்துள்ளதும் தெரிய வந்திருக்கின்றது. இவர்களது சொத்தும் விசாலமானது.

பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளின் போது எமது ஜனாதிபதி பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டார் எனவும் கூறினார்.

செல்வராசா பத்மநாதனிடம் விசாரனை நடத்த இந்தியாவுக்கு அனுமதி இல்லை: இலங்கை திட்டவட்டம்

விடுதலைப்புலிகளின் தலைமை செயலாளரும், அனைத்துலக உறவுகளுக்கான செயலாளருமான செல்வராஜா பத்மநாதன் கடந்த ஆகஸ்டு மாதம் 10ந் தேதி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டார்.

இலங்கையின் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கான ஆயுத வர்த்தகம், நிதி உதவி சேகரித்தல், அனைத்துலக தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை பின்னணியில் உள்ள சதி குறித்து பத்மநாதனிடம் விசாரணை நடத்த இந்திய புலனாய்வு துறையினர் விருப்பும் தெரிவித்தனர்.

ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பத்மநாதன் இந்தியா வந்து சென்றார். இதை தொடர்ந்து ராஜீவ் கொலையாளிகளுக்கு பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். எனவே விசாரணைக்காக பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அனைத்துலக ரீதியாக விடுதலைப்புலிகள் ஆயுத வர்த்தகம் செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே இதுகுறித்து அவரிடம் விசாரிக்க அனுமதி கேட்டும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை பத்மநாதனிடம் விசாரணை நடத்த அனுமதிப்பதில்லை என இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அவரிடம் இலங்கை அரசின் விசாரணை முடிந்து சட்ட நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இது குறித்து முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் கடந்த 18-ந்தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 7,200 விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 1,600 பேர் பெண் விடுதலைப்புலிகள். இவர்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய முடிவு செய்துள்ளனர்.

2 பேட்ஜ் விடுதலைப்புலிகள் சரண் அடைய உள்ளனர். இந்த தகவலை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர்.

எனவே, இதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருகிறேன். அவர்களை சமுதாயத்தில் ஒரு அங்கமாக சேர்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.Justify Full

கொழும்பு, மே. 25-



விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் ஏற்கனவே அறிவித்தது. இதை விடுதலைப்புலிகள் சர்வதேச விவகார தலைவர் பத்மநாபன் மறுத்தார். மறுநாள் கொல்லப்பட்ட பிரபாகரன் உடலை இலங்கை ராணுவம் காட்டியது.

இதற்கு பின்பும் பத்மநாபன் மறுப்பு தெரிவித்தார். வேறு ஒருவர் உடலை காட்டி பிரபாகரன் என்று கூறுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் பத்மநாபன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் பிரபாகரன் இறந்து விட்டதை ஒத்துக்கொண்டார்.

ஆனால் இதற்கு விடுதலைப்புலிகளின் இணைய தளமான தமிழ்நெட்டில் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச விவகார தலைவர் பத்மநாபன் 17-ந்தேதி நடந்த போரில் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக புலம் பெயர்ந்தோர் விடுதலைப்புலிகள் துறை தமிழ் நெட்டிடம் கூறியுள்ள தகவலில் விடுதலைப்புலிகள் தலைமையிடம் இருந்து உரிய ஆதார தகவல் வரும்வரை எதுவும் கூறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு உளவுத்துறை கொடுத்துள்ள தகவல்படி பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார்.

பிரபாகரன் இறந்ததற்கான உறுதியான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன் கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன் இலங்கையில் போர் நடந்த பகுதிகளை விமானத்தில் பறந்தபடி பார்த்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக் கப்பட்டுள்ள முகாம்களையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முகாம்களில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் கலங்கி போனேன். மக்களை அவர்கள் வசித்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்த முயற்சிக்கிறார்கள். இது அரசின் பொறுப்பு. மக்களை குடியேற்றுவதில் தெளிவான வரையரை தெரிகிறது. இதில் இடைவெளி ஏற்பட்டால் அதை ஐ.நா. சபை நிரப்பும். இலங்கையில் 2 கோடி மக்களில் 12.6 சதவிதமே தமிழர்கள் உள்ளனர். அவர் கள் காயங்களை குணப்படுத்த இதுவே உரிய நேரமாகும். இடம் பெயர்ந்துள்ள 3 லட்சம் மக்களின் மனிதாபிமான உதவிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு சென்றார்.

இலங்கையில் வவுனியாவில் போர் நடந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும், இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் பெரும் எண்ணிக்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மானிக் பாம் அகதிகள் முகாமையும் அவர் பார்வையிட்டார்.

இதன் பின்னர், அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பான் கீ மூன் தீவிர ஆலோசனையும் நடத்தினார். இதன் பிறகு இரு தலைவர்களின் சார்பாகவும் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரது குறைகளை தீர்க்கவும், அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றவும், இலங்கையின் நீண்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக அரசியல் ரீதியாக தீர்வு காண வாய்ப்புகளை உருவாக்கவும் இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடக்காத வடக்கு இலங்கை பகுதியில் ஜனநாயக ரீதியான அமைப்பினை ஏற்படுத்தவும், அரசியல் ரீதியாக அங்கு தேர்தலை நடத்தி முடிக்கவும் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூனும், ராஜபக்சேவும் அந்த கூட்டறிக்கையில் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

வடக்கு பகுதி மக்களுக்கு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு உறுதியாக இருப்பதாகவும் அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts with Thumbnails