அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகம் மற்றும் தமிழக மக்கள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கும் போது, எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் என்னுடைய தலை யீடு அவசியமாகிறது.

மு.க. ஸ்டாலின் தன்னுடைய தீர்மானத்தில், 1984 முதல் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து, மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என தனது தந்தைக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழர்கள் அனைவருக்கும் நிரந்தர குடியுரிமை தகுதி வழங்கப்படும் என்று மத்திய அரசு பிரகடனம் செய்வதன் மூலம், தமிழ்மொழி “செம் மொழி” பிரகடனத்தைப்போல் கூடுதலாக எந்தப்பயனும் இலங்கைத்தமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை.
‘நிரந்தரக் குடியுரிமை’ என்ற தகுதி காரணமாக அவர் களுடைய தற்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களிலிருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? தமிழ் நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக உதவி அவர்களுக்கு அளிக்கப்படுமா? உச்ச நீதி மன்றம் இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்திருக்கின்ற நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும்? இல்லையெனில், 1960-ஆம் ஆண்டு சிரிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையின் படி, அகதிகளாக இந்தியாவிற்கு வந்து, இன்று இந்தியாவில் கொத்தடிமைகளாக அருவருக்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான “இந்திய வழி தமிழர்களை” விட கூடுதல் முன்னேற்றம் கிடைக்குமா?

இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், பங்களா தேஷ், பர்மா (மியன்மார்) மற்றும் திபெத் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக்குடியுரிமை தகுதி குறித்து இந்திய அரசு என்ன செய்யும்?

இவை எல்லாம் கருணாநிதிக்கு நன்கு தெரியும். இவருடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்பதும் இவருக்கு நன்கு தெரியும். இருப்பினும், தனது மகன் மூலம் இந்தப்பிரச்சினையை எழுப்பி, இது “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக்கேட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம் பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், தங்கள் உறவினர்களுக்கு மத்தியில் மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். சொந்த மண்ணில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக இலங்கையில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.

அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவில் நிரந்தரக்குடியுரிமை தகுதி அளிக்கப்பட வேண்டும் என்று தன்னிச்சையாக தனக்கே உரிய பாணியில் கருணாநிதி அறிவித்திருப்பது, 1950-களில் ‘சிங்களர்கள் மட்டும்‘, மற்றும் ‘தரப்படுத்தல்’ கோட்பாடுகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்தை கொச்சைபபடுத்தும் விதமாக அமைந் துள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள அகதிகள் முகாம் மிருகக்காட்சியல்ல - எல்லோரும் பார்க்க! என்று ஆணவமாகவும், இழிவாகவும் பேட்டியளித்த இலங்கைத் துணைத் தூதரை வெளியேற்றுக! இந்திய அரசுக்குத் திராவிடகழக தலைவர் வீரமணி வேண்டுகோள்


இலங்கை முகாம் களில் முடக்கப்பட் டுள்ள ஈழத் தமிழர் களை நேரில் சந்திக்க வும், முகாம்களைப் பார்வையிடவும் அனு மதிக்கவேண்டும் என்ற வேண்டு கோளைக் கொச்சைப் படுத்தி, ஆணவமாகப் பேட்டியளித்த இந்தி யாவுக்கான இலங் கைத் துணை தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை இந்திய அரசு உடனடியாக வெளியேற்ற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த முதல் தேதியன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல உள்ளது.

மிருகக் காட்சி சாலையா?

இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க அனுமதி அளிக்கவேண்டும் என்று பலரும் கேட்கிறார்கள். நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையா நடத்துகிறோம்; பார்வையாளர்களை அனுமதிக்க? என்று எதிர்க்கேள்வியைப் போட்டுள்ளார்.

இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் அய்.நா. செயலாளர் போன்றவர்கள் எல்லாம் (ஏன், இந்து ராம் கூட) சென்று பார்த்தார்களே, அவர்கள் பார்த்தது மிருகக்காட்சி சாலைதானா?

மறைமுகமான ஒப்புதலே!

ஒரு வகையில் மறைமுகமாக இலங்கைத் துணைத் தூதர் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கை முகாம்களில் ஈழத் தமிழர்கள் மிருகங்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்று உலகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளது. அதனை வேறு வகையில் ஒப்புக்கொண்டுள்ளார் என்றே இதனைக் கருதவேண்டும்.

ஒரு பொறுப்புள்ள அதிகாரியின் பேட்டியாக அது அமைந்திடவில்லை. ஆணவமும், அதிகார வெறியும், சிங்கள வெறித்தனத்தின் பிரதிபலிப்பும்தான் இதில் பொங்கி வழிகிறது!

தமிழக மீனவர்களைத் தாக்கவில்லையாம்!

அதேபோல, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதாக வெளிவருவது எல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளாம். தமிழக ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனவாம். இலங்கை _ இந்திய உறவுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல் என்றும் கூறி இருக்கிறார்.

இதைவிட அபாண்டமான பொய் ஒன்றும் இருக்க முடியாது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் பலியானதெல்லாம் எப்படி பொய்யாக, புனைந்துரையாக இருக்க முடியும்? இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டதெல்லாம் எப்படி கற்பனையானதாக இருக்க முடியும்?

பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை என்று இலங்கை தரப்பில் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

கச்சத்தீவுபற்றியும் ஆணவப் பேட்டி

கச்சத்தீவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுதும், அது இலங்கையின் ஒரு பகுதி என்றும், கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இருக்கிறதா, இல்லையா? என்பதை விவாதிக்க இடமில்லை என்றும், வேண்டுமானால், உங்கள் அரசைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்றும் கேலியாகவும், குத்தலாகவும் பதில் சொல்லியிருக்கிறார்.

பல வகைகளிலும் இலங்கை அரசு இந்தியாவை அவமானப்படுத்தி வருகிறது.

இப்பொழுது ஒரு துணைத் தூதுவரே ஏளனமும், கேலியும் செய்யும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது.

இலங்கைத் தூதரை வெளியேற்றுக!

இந்த அதிகாரியின் பேட்டியை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசு உடனடியாக இவரை வெளியேற்றவேண்டும். இதன்மூலம் இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

இலங்கைக்குத் தூதராக ஒரு தமிழர்

நாம் நீண்ட காலமாக வற்புறுத்தி வரும் இலங்கையில், இந்தியாவுக்கான தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்கவேண்டும். இதுதான் சரியான பதிலடியாகக் கூட இருக்க முடியும்.

தமிழர்களின் வேண்டுகோள்

குட்டைக் குட்டக் குனிந்து கொடுக்கும் இந்தியாவின் போக்கில் மாறுதல் தேவை_ இது ஒட்டுமொத்தமான உலகத் தமிழர்களின் வேண்டுகோளாகும்.

தலைவர்,
திராவிடர் கழகம்.

இலங்கைத் துணைத் தூதுர் கிருஷ்ணமூர்த்தி இடம் பெயர் முகாம்கள் மிருகக்காட்சிச் சாலை என்று கூறியதற்கு, திருமாவளவன், வைகோ, பழ. நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன், என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தான் அப்படி கூறவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இடம் பெயர்ந்தோர் முகாம்கள் மிருகக்காட்சிச் சாலை என்று நான் கூறவில்லை. இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகையை இலங்கை அரசு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பெரிய பல்டியாக அடித்துள்ளார் இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.

சென்னைக்கு இலங்கை துணைத் தூதராக பதவியேற்றவுடனேயே வம்புடன் தனது வேலையைத் தொடங்கியுள்ளார் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.

பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஆளாளுக்கு வந்து பார்த்துப் போக இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ன மிருகக்காட்சி சாலையா? என்று கேட்டிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் M.P, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்தியாவை விட்டு அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் நான் அப்படிப் பேசவில்லையே என்று பல்டி அடித்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.

இது குறித்து அவர் கூறுகையில், நான் உண்மையில் என்ன சொன்னேன் என்றால், முகாம்களில் வசிக்கும் மக்கள மரியாதைக்குரியவர்கள். அவர்களை அடிக்கடி சென்று சந்திப்பது, அதுவும் சர்ச்சைகள் நிலவி வரும் நேரத்தில் போய்ச் சந்திப்பது என்பது பொருத்தமானதாக இருக்காது என்றுதான் கூறினேன்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதுதான் எனது முதல் பணி, முக்கிய பணி.

ஏற்கனவே இலங்கைக்கு தூதுக் குழுவை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அந்தக் குழுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார் கிருஷ்ணமூர்த்தி.


கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கூறிய இலங்கைத் துணைத் தூதரை திருப்பி அனுப்ப வேண்டும்எ ன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை. கச்சத்தீவு முற்று முழுதாக இலங்கைக்குச் சொந்தமான பகுதி. தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க உரிமையில்லை. இலங்கை கடல் எல்லைக்குள் வந்தால் கைது செய்வோம் என்று கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வெடுக்கவும் வலைகளை உலர்த்தவும் அனுமதித்து இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. இதனை மறைத்து, உள்நோக்கத்துடன் பேசியுள்ள துணைத் தூதரை விடுதலைச் சிறுத்தைகள் மிக வண்மையாக கண்டிக்கிறது.


அத்துடன் முட்கம்பி வேலி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விலங்குகள் போல் சித்தரித்துப் பேசியதற்கும் அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் இந்திய - இலங்கை கடல் எல்லை மற்றும் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கூறி இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை இந்திய அரசு மிக்க கடுமையாக கண்டிக்க வேண்டும்.


இந்திய அரசு அவரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சிறீலங்காத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி எனும் நபர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஆணவத் தோடும், அகம்பாவத்தோடும், திமிரோடும் இந்திய நாட்டையும், தமிழக மக்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணி வாய்க்கொழுப்பை வழிய விட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள வல்லரசு நாடுகளின் தூதர்கள் கூட இதுவரை இப்படி ஏளனமாகவும், எகத்தாளமாகவும் கருத்து கூறியதில்லை. அமெரிக்காவிலே உள்ள இந்தியத் தூதர் ரோனன் சென் இந்திய தலைவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் துச்சமாகப் பேசியதைக் கண்டித்து கொந்தளிப்பு ஏற்பட்டதில் அவர் மன்னிப்புக் கேட்டார்.

கடந்த 20 நாட்களுக்குள் 7 தடவைகள் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை நமது கடல் எல்லையில் தாக்கி இருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக கூறுவது பொய்ச் செய்தி என்றும், அப்படி நடக்கவே இல்லை என்றும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அக்கிரமமாக கூறியுள்ளதோடு, கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையே இல்லை என்றும், நமது மீனவர்களை இலங்கை கடற்படை பாதுகாக்கிறது என்றும் கிண்டலாகக் கூறி உள்ளார்.

இந்தியக் கடற்படைக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது என்றும் கூறியுள்ளார். தமிழ் இனத்தையே இழிவுப்படுத்தும் விதத்தில் ஏளன வார்த்தைகள் வீசிய துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை பகிரங்க மன்னிப்புக் கேட்கச் செய்வதோடு உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

-

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துள்ள இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது.

போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்த காலகட்டத்தில் அரசியலுக்குள் பிரவேசித்தவர் அவர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய அவர் மக்கள்மய அரசியலில் அதீத நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார்.

காலச் சூழல் அதற்கு இடம்தராத நிலையிலும் கூட கடைசிவரை நிதானம் தவறாது மக்களுக்காகச் சேவை செய்தார்.

தமிழ்த் தேசியத்தின் விரோதிகள் அவரது பாதையைத் தடம்புரளச் செய்ய பல தடவைகளில் முயற்சி செய்தபோதிலும் கூட அது இறுதிவரை கைகூடவில்லை.

ஆசை வார்த்தைகள் கூறி அவரைத் தமது வலையில் சிக்க வைக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவற்றுக்கு வளைந்து கொடுக்காத அவர் இறக்கும் வரை தான் கொண்ட கொள்கையில் வழுவாது இருந்தார்.

இறுதி மூச்சு வரை இலட்சியப் பற்றுடன் வாழ்ந்து மறைந்த அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது கவலையைக் காணிக்கையாக்குகிறோம். ஈழத் தமிழ் மக்கள் மனதில் அவரின் நாமம் நீங்காது நிலைத்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087.
தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நக- : 91-44-2377 5537பழ.நெடுமாறன்ஒருங்கிணைப்பாளர்இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.

இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்களஅரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் , போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம்மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப்பரப்பப்படுகின்றன.

பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழமக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஈழத்தமிழர்களை காப்போம் என்னும் பெயரில் 1ந் தேதி சென்னை சைதாப்பேட்டை, 7 ந் தேதி திருச்சி, 13 ந் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் பேரணி நடத்துவது. இலங்கையில் உணவு, மருந்து இன்றி போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவிகள் செய்ய வேண்டும்.

ராஜபக்சேயை போர் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழக எம்.பி.க்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி உண்மைகளை கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Posts with Thumbnails