இலங்கை தமிழர்கள் நாளை முதல் சொந்த இடங்களில் குடியேறுவார்கள்: கலைஞர் கருணாநிதி
Posted 7:29 PM by S R E E in லேபிள்கள்: ஈழ செய்திகள், ஈழம்
இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்பிக்களூடன் கலந்தாய்வு செய்த பிறகு முதல்வர் கருணாநிதி, ‘’இலங்கையில் தமிழர்கள் நாளை முதல் சொந்த இடங்களில் குடியேறுவார்கள். முதற்கட்டமாக 58ஆயிரம் பேர் 15 நாட்களில் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்’’என்று தெரிவித்தார்.
இலங்கை முகாம்களில் தமிழர்களின் நிலை என்ன என்பதை நேரில் கண்டறியவதற்காக திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் 10 எம்.பி.க்களை கொண்ட குழு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு சென்றது.
முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களை தமிழக குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதனையடுத்து கடந்த 11ந் தேதி யாழ்ப்பாணம் சென்று அங்கு வசிக்கும் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அன்று மாலை வவுனியாவில் உள்ள மாணிக்பார்ம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். 5 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது.
பின்னர் எம்.பி.க்கள் தனித்தனியாக சென்று தமிழ் அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இதை அடுத்து திங்கட்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பின் பேரில் நுவரலியா மலையக பகுதிகளுக்கு சென்று அங்கு வசிக்கும் தமிழக வம்சாவளி தொழிலாளர்களை கண்டு பேசினார்கள். அங்கிருந்து ஹட்டனுக்கு தமிழக எம்.பி.க்கள் குழு சென்றபோது ஏராளமான மக்கள் திரண்டு அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர்.
திங்கட்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சேயை தமிழக குழுவினர் சந்திப்பதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அவர்கள் ராஜபக்சேயை சந்தித்து பேசினார்கள்.
முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினார்கள்.
அவர்களது கோரிக்கைகளை கேட்ட ராஜபக்சே, தமிழர்கள் வசித்த பகுதிகளில் விடுதலைப்புலிகள் வைத்துள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் தமிழர்கள் அப்பகுதிகளில் மறு குடியமர்த்தம் செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
தமிழக எம்.பி.க்கள் இலங்கைக்கு வந்து முகாம்களின் நிலையை கண்டறிந்ததை ராஜபக்சே பாராட்டினார். இந்த சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானும் உடனிருந்தார்.
பின்னர் எம்.பி.க்கள் குழு இலங்கை பிரதமரை சந்தித்து பேசியது. இன்று தமிழக எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமா ஆகியோரை சந்தித்து, முகாம்களில் தாங்கள் கண்டறிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
கடந்த 4 நாட்களாக இலங்கையின் பல்வேறு முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்திய தமிழக எம்.பி.க்கள் குழுவினர், தங்கள் 5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினர்.
இவர்களை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற முதல்வர் கருணாநிதி, இலங்கையில் நாளை முதல் சொந்த இடங்களில் குடியேறுவார்கள் என்று தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக