வவுனியா தடுப்புமுகாம் மக்களின் நிலையைப் பார்த்து நான் பல தடவை கண்கலங்கினேன்: திருமாவளவன்

Posted 6:35 PM by S R E E in லேபிள்கள்:
வன்னி தடுப்பு முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட திருப்தி தெரிவிக்கவில்லை. வவுனியா முகாம்களுக்கு நாம் மேற்கொண்ட பயணம் மிகவும் வேதனையையும், கடினமான வலியையுமே எமக்கு ஏற்படுத்தியது அந்த மக்களின் நிலையைப் பார்த்து நான் பல தடவைகள் கண்கலங்கிவிட்டேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐந்துநாள் பயணமாக இலங்கை வந்து வவுனியா முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பிரதமர், அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவளவன் தமிழகம் திரும்ப முன்னர் கொழும்பிலிருந்து வெளியாகும் நாளேடு ஒன்றுக்களித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில் திருமாவளவன் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

"வவுனியா தடுப்புமுகாம்களை பார்வையிட்டது மிகவும் வேதனையானதாகவும், கடினமான வலியைத் தருவதாகவும் அமைந்திருந்தது. மக்களை ஏன் இந்தளவுக்குப் போட்டு வதைக்கின்றார்கள் என்ற கேள்வி நமக்குள் எழுந்தது. அங்குள்ள மக்கள் கூட அந்தக் கேள்வியைத்தான் எழுப்பினார்கள். நாம் என்ன பாவம் செய்தோம்? ஏன் எங்களைப் போட்டு வதைக்கின்றார்கள்? இதற்குப் பதிலாக விஷம் கொடுத்து ஒட்டுமொத்தமாகக் கொலை செய்துவிடலாமே என பெணகள் தலையிலடித்துக்கொண்டு அழுதவாறு சொன்னார்கள். மூன்று நான்கு சந்தர்ப்பங்களில் நானே கண்கலங்கிப் போனேன்.

பெரும்பாலான இளைஞர்கள் பேசுவதற்கே அஞ்சினார்கள். எங்களுடன் பேசினால் பின்னர் அடையாளம் கண்டு ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். எங்களை வெளியில் அனுப்பி சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். இப்போதுதான் புலிகள் இல்லையே, பிறகு எதற்காக எங்களைப் பிடித்து வைத்திருக்கின்றார்கள்? என்றெல்லாம் அங்குள்ள மக்கள் கதறினார்கள்.

அத்துடன் பெரும்பாலான மக்கள் குளிக்க, குடிக்க போதிய தண்ணீர் இல்லை என்றும் தண்ணீர் பிடிப்பதற்காக ஒரு வார காலம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் வருத்தத்துடன் சொன்னார்கள். இது மிகவும் உச்சமான குறையாக அங்கு வெளிப்ப்பட்டது. அதேவேளையில் எங்களை எங்களுடைய சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்புங்கள், அது போதும். அரசாங்கம் எமக்கு எதையுமே செய்ய வேண்டாம். நாங்கள் உழைத்துப் பிழைத்துக்கொள்கின்றோம் என்பதையே அங்குள்ள மக்கள் ஒட்டு மொத்தமாக ஒருமித்த குரலில் தெரிவித்தார்கள்.

முகாம் நிலைமைகள் திருப்திகரமாக இருக்கின்றது என இந்தக் குழுவில் எவரும் தெரிவிக்கவில்லை. எந்த அடிப்படையில் இவ்வாறான ஒரு தகவல் வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை. பயண ஏற்பாடுகள் குறித்து நன்றியை மட்டுமே சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்தோம்.

முகாம்களில் மக்கள் கடுமையாக வதைபடுகின்றார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் ஒருமித்த குரலாக அமைந்திருந்தது. அங்கு போதிய குடிநீர் இல்லை. மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என்பதை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அழுத்தமாகக் குறிப்பிட்டோம். இதுதான் நடந்தது.

இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கின்றோம். அதன் அடிப்படையில் முதல்வர் ஆவன செய்வார் என நம்புகின்றோம்.

எங்களுடைய கருத்துக்களை சிறிலங்கா ஆட்சியாளர்களுக்குக் கூறியிருந்தோம். அவர்கள் அதனைக் கேட்டுக்கொண்டனர். உங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்திவித்திருந்தார்கள். அரசாங்கத் தரப்பினருடனான பேச்சுக்களின் போது முகாம்களிலுள்ள மக்களை மீள்குடியேற்ற வேண்டும். குறிப்பாக பருவப் பெயர்ச்சிக்கு முன்னதாதக இவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதையே நாம் ஒட்டுமொத்தமான கோரிக்கையாக முன்வைத்தோம்.

இருந்தபோதிலும் கண்ணி வெடிகளை அகற்றிய பின்னரே மீள்குடியேற்றம் செய்ய முடியும் என்பதே அரசாங்கத்தின் பதிலாக அமைந்திருந்தது. அதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரியப்படுத்தினார்கள்" என திருமாவளவன் மேலும் தெரிவித்தார்.

நன்றி : புதினம்



0 comment(s) to... “வவுனியா தடுப்புமுகாம் மக்களின் நிலையைப் பார்த்து நான் பல தடவை கண்கலங்கினேன்: திருமாவளவன்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails