ராஜபக்சே அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு

Posted பிற்பகல் 12:45 by S R E E in லேபிள்கள்: , ,
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு – எழுத்துருவாக்கம் தொகுப்பு ‐ GTN

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் மாட்டியுள்ளது. கேள்விப் பத்திர நடைமுறைகளையெல்லாம் மீறி தனது உறவினருக்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை வழங்கியுள்ளது.

கொரியாவைச் சேர்ந்த சம்சுங் கோப்ரேசனின் இலங்கைப் பிரதிநிதி முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஸவின் உறவினர் என்பதால் கேள்விப் பத்திர ஒப்பந்த நடைமுறைகளை மீறி இவ்வொப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் எண்ணப்படி இலங்கையின் இலத்திரனியல் அரசாங்க வலைத் தொடர்பை வலுப்படுத்துவதற்காக பல மில்லியன் தொடர்பான இவ்வொப்பந்தம் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது.

எல்லா அரச நிறுவனங்களையும் ஒரே கணனி வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதற்காக 15 மில்லியன் டொலர் பெறுமதியான இவ்வொப்பந்தம் 2005 ஆம் ஆண்டு ஜுலை 6ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. கொரிய நிறுவனமொன்றுக்கு இத்திட்டம் வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் இந்நிதி கொரியாவிலுள்ள இறக்குமதி ஏற்றுமதி வங்கியால் வழங்கப்பட்டிருந்தது.

கொரியாவைச் சேர்ந்த சம்சுங் நிறுவனமும் கொரிய ரெலிகொமும் இதற்கான கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பித்திருந்தன. கொரிய ரெலிகொமை விட சம்சுங் நிறுவனம் அதிக விலைகோரலைக் குறிப்பிட்டிருந்தும் கூட சம்சுங் நிறுவனத்திற்கே அவ்வொப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
2006 ஓகஸ்டில் 14.8 மில்லியன் டொலர்களுக்கான இவ்வொப்பந்தம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குக் கீழ் வரும் ஐ.சி.ரி.ஏ எனும் தகவற் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், சம்சுங்கின் இலங்கை ஏஜன்டான அஸ்ஸற் நெற்வேர்க்குக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

தகவல் தொடர்பாடற் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அஸ்ஸற் சார்பில் டில்சான் விக்கிரமசிங்கவும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த டில்சான் விக்கிரமசிங்க முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஸவின் மருமகனாவார்.

ஓப்பந்தம் முறைகேடாக வழங்கப்பட்டது மட்டுமன்றி ஒப்பந்த விதிகள் கூட முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஒப்பந்தத்தில் உள்ளதற்கு மாறாக மிக மலிவான தரம் குறைந்த உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அப்பொருட்களை இலங்கையில் அதனிலும் பார்க்கக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கிறது.

உள்நாட்டமைச்சின் கீழ் வரும் இரண்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் இவ்வுபகரணங்கள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. உதாரணமாக 123 சென்றல் யுபிஎஸ்கள் தலா ஒவ்வொன்றும் 1598.29 டொலர் பெறுமதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் இதனைவிடத் தரம் வாய்ந்த யுபிஎஸ்ஸை 800 டொலருக்குக் கொள்வனவு செய்ய முடியும்.

அதேபோல் 3225 செல்ரோன் கொம்பியூட்டர்கள் தலா 1394.19 டொலர்ப்படி கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதே பொருளை இலங்கையில் 350 தொடக்கம் 400 டொலருக்குள் வாங்க முடியும்.

1175.19 டொலரின்படி 325 கார்ட் டிஸ்க் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் சராசரியாக இதனை இலங்கையில் 350 டொலருக்கு வாங்கலாம். இதேபோல் 325 எச்.பி ஸ்கானர்( மொடல் ‐ 8200) 519 டொலர்ப்படி வாங்கப்பட்டிருக்கிறது. அது இலங்கையில் 254 டொலர் ஆகும்.

யுபிஎஸ், ரவுட்டர், எக்ஸ்.பி, கொம்பியூட்டர் போன்றவை ஓப்பந்தத்தில் குறிப்பிட்ட தரத்தின்படி அமைந்திருக்கவில்லை. இவை ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதாக உள்ளன.

இவை தொடர்பான எவ்விதக் கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. முதற் பெண்மணியின் மருமகன் என்ற காரணத்தினால் இவை தொடர்பாக வருகின்ற குற்றச்சாட்டுக்கள் கூட கவனத்தில் கொள்ளப்படாது புறக்கணிக்கப்படுகின்றன.
தகவல்: சண்டே லீடர்

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளருக்குச் சொந்தமான வானொலி 400 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது?
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூனுகல்லவிற்குச் சொந்தமான சத் எவ்.எம். வானொலியை பாகிஸ்தானியர் ஒருவருக்கு 400 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது குறித்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆணைக்குழுவின் அனுமதியின்றி வானொலிக்கான அனுமதிப் பத்திரத்தை வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய முடியாது. லக்ஸ்மன் ஹூனுகல்லவிற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரமானது செட் நெட் பிரைவட் லிமிட்டட் என்ற நிறுவனத்தினால் சத் எவ்.எம். வானொலி கடந்த காலங்களில் இயங்கிவந்தது.

இந்த நிலையில் லத் எவ்.எம். வானொலிக்கான அனுமதிப்பத்திரத்தைக் கொள்வனவு செய்துள்ள பாகிஸ்தானியர் தெற்காசியப் பிராந்தியத்தில் பிரபல வர்த்தகர் எனவும் ஆசிய பிராந்தியத்தில் அவரை எக் போஸ் என்ற புனைப் பெயரிலேயே அழைப்பதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இந்த நபர் அல் கைதா அமைப்புடன் சம்பந்தப்பட்டிருப்பதாக அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. குறித்த பாகிஸ்தானியர் இலங்கையில் வசித்துவருவதாகக் கூறிப்படுகிறது.

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் எவ்வித தேவைகளையும் மேற்கொள்ளாது மக்களின் பணத்தை கொள்ளையிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதியின் புதையலாக மாறியுள்ளது?

ஈ‐ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதியின் உறவினர்களின் புகலிடமாக மாறியுள்ளதுடன், ராஜபக்ஷகளின் புதையலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஈ‐ஸ்ரீலங்கா திட்டம், சீ….ஸ்ரீலங்காத் திட்டமாக மாறியுள்ளதாக ஊழல்தொடர்பான தகவல்களை வெளியிட்டுவரும் இணையத்தளம் ஒன்று ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இந்த இணையத்தளம் ஈ‐ஸ்ரீலங்கா திட்டத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகளை வெளியிட்டிருந்தது. கணனிகளைக் கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திரக் கோரல், கணனிகளைத் தெரிவுசெய்வது போன்றவற்றிலும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தன.

ஸ்ரீலங்கா திட்டமானது அரச அலுவலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்தும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அரச அலுவலகங்கள் தொடர்ந்தும் முன்னைய பாணியிலேயே தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இலங்கை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், தொழில் நீதிமன்றம் உள்ளிட்ட 350 நிறுவனங்கள் இதுவரை கணனிமயப்படுத்தப்படவில்லை.

சில நீதிமன்றங்களில் இரண்டு அல்லது மூன்று கணனிகளே உள்ளன. போதுமான கணனிகள் இருக்குமாயின் நீதிமன்றப் பணிகளை தற்போதுள்ளதைவிட விரைவு படுத்த முடியும். இதனைத்தவிர ஆட்பதிவுத் திணைக்களத்திலும் கையால் எழுதியே ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.இதன்காரணமாகவே அடையாள அட்டையொன்றை விநியோகிக்க ஆறு மாதகாலத்திற்கு மேல் செல்கிறது.

இந்தத் திணைக்களத்தின் பணிகளை கணனிமயப்படுத்தியிருந்தால், அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியிருக்கலாம். இவ்வாறான பணிகளைச் செய்ய வேண்டிய ஈ‐ஸ்ரீலங்கா திட்டத்தினர் மக்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட்டு வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.0 comment(s) to... “ராஜபக்சே அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails