இலங்கை மீது மனித உரிமை மீறல் விசாரணை:

Posted AM 12:18 by S R E E in லேபிள்கள்:
இலங்கை மீது மனித உரிமை மீறல் விசாரணை: ஈழத்தமிழர்கள் நலனுக்கு ஏற்ப இந்தியா முடிவு எடுக்க வேண்டும்; பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

சென்னை, மே. 26-

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் நடந்தபோது, ஈவு இரக்கமின்றி அப்பாவித் தமிழர்கள் குண்டுவீசி கொல்லப்பட்டனர்.

கடைசி நாட்களில் நடந்த தாக்குதல்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் கொத்துக் குண்டுகளுக்கு தமிழர்கள் பலியானதை அமெரிக்கா தன் உளவு சாடிலைட் மூலம் படம் பிடித்துள்ளது. அந்த படங்களை ஆதாரமாக வைத்து இலங்கை மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அமெரிக்கா புகார் கூறி உள்ளது.

இந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இது இலங்கைக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை தோற்கடிக்க சர்வதேச அளவில் இலங்கை ஆதரவு திரட்டி வருகிறது. ரஷியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தீர்மானம் தங்கள் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது போல உள்ளது என்று இலங்கை கூறி உள்ளதால், இந்த விவகாரத்தில் இந்தியாவும், இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது, அந்த நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், எல்லை ஒற்றுமையையும் பாதிக்கும் என்ற கேள்வி எழுந்தாலும் கூட, தற்போது இலங்கை விவகாரத்தை ஒரு சிறப்பு அம்சமாக கருத வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணம் உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்களிடம் எழுந்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

இதற்கிடையே ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் பற்றி இன்று ஆய்வு நடந்தது. இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க ஒரு ஆணையம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

மாலைமலர்


0 comment(s) to... “இலங்கை மீது மனித உரிமை மீறல் விசாரணை:”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails