பிரபாகரன் ஓடவில்லை: பா.நடேசன்

Posted பிற்பகல் 12:18 by S R E E in லேபிள்கள்:


மக்களை கேடயமாக பிடிக்கவில்லை - பிரபாகரன் ஓடவில்லை: பா.நடேசன்

வன்னி: வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். அதேபோல பிரபாகரன் எங்கும் தப்பி ஓடவில்லை. மக்களுடனேயே இருந்து போராடிக் கொண்டிருக்கிறார் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பா.நடேசன் அளித்துள்ள பேட்டி விவரம்: 

"எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக இலங்கை அரசாங்கம் இதனைச் சொல்கின்றது.

எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்.


உயிருக்குப் போராடியபடி அங்கும் இங்கும் அலையும் இந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர். 

புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும்.

பிரபாகரன் எங்கும் ஓடவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடிக் கொண்டுதானிருக்கிறோம். 

சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்" என்று நடேசன் கூறியுள்ளார்.

பிரபாகரன் தப்பி ஓடி விட்டார் என்று இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறி வரும் நிலையில், பிரபாகரன் எங்கும் போகவில்லை, மக்களுடனேயேதான் இருக்கிறார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.0 comment(s) to... “பிரபாகரன் ஓடவில்லை: பா.நடேசன்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails