தமிழ் அகதிகள் பிரச்சினை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை

Posted பிற்பகல் 11:02 by S R E E in லேபிள்கள்: ,

கான்பெரா: இலங்கையிலிருந்து பெருமளவில் ஈழத் தமிழர்கள் புகலிடம் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வருவதால், அந்த நாடு கவலை அடைந்துள்ளது. இந்தோனேசியா மூலமாக இவர்கள் வருவதால் இதைத் தடுக்க என்ன வழி என்று கேட்டு இந்தோனேசிய அதிபருடன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் ஆலோசனை நடத்தியுள்ளார.

இலங்கையிலிருந்து பெருமளவிலான தமிழர்கள் முன்பு தமிழகத்திற்குத்தான் படகுகள் மூலம் அகதிகளாக வருவார்கள். ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவை நோக்கி அவர்கள் பெருமளவில் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்தோனேசியா சென்று அங்கிருந்து உயிரைப் பணயம் வைத்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியா செல்கின்றனர். அவர்கள் தவிர ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் அகதிகளாக வருகின்றனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு, கிறிஸ்துமஸ் தீவு என்ற இடத்தில் இவர்களை தங்க வைத்து வருகிறது. அந்தத் தீவில் உள்ள புகலிடம் தேடி வருவோருக்கான முகாமில் இதுவரை 1200 பேர் சேர்ந்து விட்டனர். இனியும் யாரையும் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் 260 பேருடன் (பெரும்பாலானோர் தமிழர்கள்) ஒரு படகு இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கிக் கிளம்பியது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய அதிபரைத் தொடர்பு கொண்டு அந்தப் படகைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அப்படகு நடுக் கடலில் மடக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது அந்தப் படகில் இருந்தவர்கள் மேற்கு ஜாவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரூட் கூறுகையில், அதிபர் சுசிலோ பம்பாங் யுத்யோனாவுடன் சனிக்கிழமை போனில் பேசினேன். அதிக அளவில் நடந்து வரும் இந்த மக்கள் கடத்தல் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன் என்றார்.

இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர், பொருளாதார மந்த நிலை காரணமாக பெருமளவிலானோர் ஆஸ்திரேலியாவை நாடி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்படி வருகிறவர்களை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புவதில்லை. மாறாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி விடுகிறது. ஆனால் இதை ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. கெவின் ரூட் வந்தது முதலே ஆஸ்திரேலியாவின் குடியேற்ற கொள்கையில் பெரும் குழப்பமாகி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு முன்பு இருந்த ஜான் ஹோவர்ட் அரசு, அகதிகளாக வருவோர் பிடிபட்டால் அவர்களை நெளரு அல்து பாபுவா நியூ கினியாவுக்கு கொண்டு சென்று அங்குள்ள சிறப்பு மையங்களில் (சிறைகள்தான்) வருடக் கணக்கில் அடைத்து வைத்து விடுவார்கள். ஆனால் கெவின் ரூட் பிரதமராக வந்த பின்னர் இந்த நடைமுறையை ரத்து செய்து விட்டார்.

கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பபடுவோரை முறையாக விசாரித்து உரிய காரணங்களுடன் வருவோருக்கு ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.0 comment(s) to... “தமிழ் அகதிகள் பிரச்சினை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails