இலங்கைத் தமிழர்கள் சம உரிமைகள் கொண்ட மக்களாக வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு: கவிஞர் கனிமொழி

Posted பிற்பகல் 12:23 by S R E E in லேபிள்கள்: , ,
இலங்கைத் தமிழர்கள், அவர்களுக்கு உரிய, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சகல உரிமைகளுடனும் சமமான குடிமக்களாக வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இங்கு வாழும் மக்கள் எத்தகைய நிலையில் உரிமைகளற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரில் அறிந்து கொள்ளவே நாம் இங்கு வந்துள்ளோம். இவ்வாறு நேற்று யாழ். சென்ற தமிழக நா.உ. கவிஞர் கனிமொழி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கைத் தமிழ் மக்கள் சம உரிமை உடையவர்களாக இங்கு வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம். நீங்கள் எங்களை இதமான உணர்வோடு வரவேற்றீர்கள். உங்களுக்காக உணர்வோடு பேசக் கூடிய ஒரு குழுவாக நாம் இங்கு வருகை தந்திருக்கிறோம்.

நீங்கள் இங்கு வைத்துள்ள கோரிக்கைகளையும் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் நாம் உறுதியாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு இருக்கக் கூடிய மக்களுக்கு ஒரு நாட்டுக் குடிமக்களாக அவர்களுக்கு வந்து சேர வேண்டிய நியாயமான உரிமைகளையும் நீதிகளையும் குடியுரிமைக்கான உரிமைகளையும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

இங்கு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இங்கு ஒரு ஜனநாயக சூழல் திரும்ப வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். அதுவே இந்தியாவின் விருப்பமாகவும் உலகத்திலே இருக்கின்ற ஏனைய தலைவர்களின் விருப்பமாகவும் இருக்கும்.

சுமுக நிலை இலங்கையில் மீண்டும் திரும்ப வேண்டும். தமிழர்கள் சம உரிமைகளுடன் சிறந்து வாழ வேண்டும் என்பதற்காக எங்களால் என்னென்ன முயற்சிகளை செய்ய முடியுமோ நிச்சயமாக ஒவ்வொரு கட்சி ரீதியாகவும் சரி இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் நாங்கள் செய்வோம் என்பதை உங்களிடத்தில் உறுதியாகக் கூறுகிறோம்.

உங்களின் எண்ணங்களை உறுதியாக நிச்சயமாக இந்திய அரசுக்கு எடுத்துக் கூறுவோம் என்றார்.

-0 comment(s) to... “இலங்கைத் தமிழர்கள் சம உரிமைகள் கொண்ட மக்களாக வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு: கவிஞர் கனிமொழி”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails