சிங்கள குடியேற்றம், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்: இந்திய குழுவிடம் த.தே. கூட்டமைப்பு வேண்டுகோள்

Posted பிற்பகல் 10:33 by S R E E in லேபிள்கள்: , ,
வவுனியா அகதி முகாம்களிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களையும் உடனடியாக சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதன் அவசியம் பற்றியும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் அரசு சிங்களக் குடியேற்றங்களையும், இராணுவ தளங்களையும் அமைக்க முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டியது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை வந்துள்ள தமிழக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. நேற்று மாலை “இந்தியன்’ இல்லத்தில் தமிழக அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசியது தொடர்பில் கருத்துத் தெவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இது பற்றி மேலும் தெவித்ததாவது,

மழை காலம் வருவதற்கு முன்னர் இந்த அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அனைவரையும் துரிதமாக விடுவிக்க முடியாதென்றால் அகதி முகாம்களிலுள்ள மக்கள் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணையில் எவ்வித குற்றம் செய்யாதோரென நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களையாவது உடனடியாக விடுவிப்பதுடன் ஏனையவர்களையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும்.

முகாமில் உள்ள மக்களை விடுவித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் அல்லது அவர்களது மாவட்டங்களில் தற்காலிகமாக திறந்தவெளி முகாம்களை உருவாக்கி அதில் தங்க வைத்து சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று இலங்கை அரசு சிங்களக் குடியேற்றங்களையும், இராணுவத் தளங்களையும் அமைக்க முயற்சிக்கிறது. இது முற்றாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அகதி முகாம்களிலுள்ள மக்கள் இன்று அடிப்படை வசதிகளின்றி கஷ்டப்படுகின்றனர். கடந்த மூன்று தினங்களாக குடிநீர்த் தட்டுப்பாட்டினால் பெரும் கஷ்டப்பட்டுள்ளனர். கிடைக்கக் கூடிய நீரும் மாசடைந்தே காணப்படுகிறது என்பன போன்ற விடயங்களையும் சுட்டிக் காட்டினோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அகதி முகாம்களையும் பார்வையிட வேண்டும். இந்த முகாம்களைப் பார்வையிட்ட பின் மீண்டும் தம்மைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று இயலுமாயின் இன்னுமொரு தடவை சந்திப்பதற்கு தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள் விருப்பம் தெவித்துள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவசக்தி ஆனந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஹம்மத் இமாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.0 comment(s) to... “சிங்கள குடியேற்றம், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்: இந்திய குழுவிடம் த.தே. கூட்டமைப்பு வேண்டுகோள்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails