ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர்தொடங்கியது.

Posted AM 5:08 by S R E E in லேபிள்கள்:
இலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் ஜெனீவாவில் தொடங்கியது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும் முகமாக 17 நாடுகள் ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவ்வாறு கோரியுள்ள 17 நாடுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள். ஆனால் இவ்வாறு அந்த 17 நாடுகள் வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிராக தமது தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இலங்கை அரசும் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கும் சிலருடைய ஆதரவு கிடைத்துள்ளது.
Justify Full
இலங்கையில் 26 வருடங்களாக அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களின் போது கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்ததாக இருதரப்பு மீதும் குற்றங்கள் சாட்டப்படுகின்றன.

எனவே இது தொடர்பில் சுயாதீனமான ஒரு விசாரணை நட்த்தப்பட வேண்டும் என்றும், சுமார் மூன்று லட்சம் பேர் இடம் பெயர்ந்து தங்கியுள்ள முகாம்களுக்கு, எந்தவிதமான தங்குதடையின்றி சென்று வர சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என தற்போது மனித உரிமை அமைப்புகள் கோரிவருகின்றன.

ஆனால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் இந்த சிறப்பு கூட்டம் நடைபெறுவது இலங்கைக்கு பிடிக்கவில்லை. அங்கு சமீபத்தில் முடிவுக்கு வந்த போரின் போது தாங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மன்னிப்பு கோர ஏதும் இல்லை என்றும், இந்த சிறப்பு கூட்டம் நேரத்தை விரயம் செய்யும் ஒரு செயல் என்றும், சக்தி மற்றும் வளங்களை வீணடிக்கும் ஒரு செயல் என்றும் இலங்கை அரசின் மனித உரிமைகள் துறைக்கான அமைச்சர் கூறியுள்ளார்.

ஸ்விஸ் அரசால் வரையப்பட்டு இன்று விவாத்த்துக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையில், இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், அங்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசால் இதற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கையில், உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடலாகாது என்கிற கொள்கையினை சுட்டிக் காட்டியுள்ளதோடு, அரசாங்கத்தால் நட்த்தப்படும் முகாம்களில் இடம் பெயர்ந்த நிலையில் தங்கியுள்ளவர்களின் தேவைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன என்று தம்மைத் தாமே பாராட்டியுள்ளது.

எனினும் இந்த இருதரப்பாலும், அதாவது இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்துள்ள நாடுகளும், இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கையும், சுயாதீனமான விசாரனைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரவில்லை.

சீனா, இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவுடன் இருக்கும் இலங்கை தன் தரப்பு வாதத்தில், இலங்கை அரசு அளித்து வரும் உதவிகளுக்கு ஐக்கிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அங்கு போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் நிதியுதவி அளித்து உதவ வேண்டும் என்றும் கூறுகிறது.

சுவிஸ் அரசால் முன்வைக்கபட்டுள்ள முன்மொழிவில், உதவி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் உதவிகள் சென்றடையும் முகமாக சர்வதேச அமைப்புகளுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரினாலும், அங்கு இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரவில்லை. சுவிஸ்ஸின் இந்த முன்மொழிவுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளன.

எனினும் இந்த இரண்டு தரப்பாரும் கொண்டுவந்துள்ள முன்மொழிவுகளும் மனித உரிமை அமைப்புகளுக்கு ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளன. இலங்கையில் நடைபெற்ற மோதல்களின் இறுதி காலகட்டத்தில் அங்கு நடைபெற்ற சமபவங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவை கோருகின்றன.

இந்திய நிலைப்பாடு

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது. இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதலை தற்போது இலங்கை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், அங்கு அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தையும் ஒற்றுமை உணர்வும் ஏற்படும் வகையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சர்வதேச சமூகத்தின் செயலாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இப்படியாக ஒரு சிறப்பு அமர்வை திணிப்பதன் மூலம், சில உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் செய்யக் கூடியப் பணிகளை அரசியலாக்கி விட்டார்கள் என்றும் இந்தியத் தூதர் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் இந்த கவுன்சிலின் வழக்கமான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கான தற்போதைய தேவை குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பை விடுத்த சுவிட்சர்லாந்து நாட்டின் தூதர், இலங்கை அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய சுவிஸ் நாட்டின் பிரதிநிதி, இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், அங்கு சென்று பணியாற்ற உதவி அமைப்புகளுக்கு தங்கு தடையின்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மேலும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், மதிக்கப்பட வேண்டியதும் அவசியமானது என்றும் சுவிஸ் நாட்டின் பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார். அங்குள்ளவர்களுக்கு சுதந்திரமாக நடமாடுவது உட்பட அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டியுள்ளார்

தமிழக முதல்வர் கருத்து

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானம் தொடர்பாக, இந்தியா பொருத்தமான முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி. ``ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது என்று உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் இந்தியா பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

``ஒரு பக்கம், இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பான கேள்வி எழுந்தாலும், இலங்கை விஷயத்தை சிறப்புப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், இதுவரை இலங்கை செய்த கொடுமைகளை எல்லாம் இந்தியா ஆதரிப்பதாகத் தான் அர்த்தம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.


1 comment(s) to... “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர்தொடங்கியது.”

1 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

இலங்கை இனவாத அரசிற்கு இந்தியா முக்கிய ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்திருக்கிறது.
தமிழர்கள் இந்தியர்கள் தானா என்ற கேள்வி வெளிப்படையாக வந்து நிற்கப் போகிறது.



கருத்துரையிடுக

Related Posts with Thumbnails