இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம் - சத்யராஜ், செல்வமணி, கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

Posted பிற்பகல் 8:23 by S R E E in

ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வதை நிறுத்தக்கோரியும் செங்கற்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக இன்றும் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 

செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மொத்தம் பதினான்கு மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த மாணவர்கள் தண்ணீர்கூட அருந்தாமல் இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து இவர்களை செங்கற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களை இன்று நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, சந்தனக்காடு தொடர் இயக்குநர் வ.கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

மாணவர்களின் உண்ணாநிலையை முடித்துக்கொண்டு வேறு வகையில் போராடும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை மாணவர்கள் நிராரித்தனர்.

இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தி இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்வரை போராட்டம் நடக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

இவர்களைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி,கோவை சட்டக் கல்லூரி மாணவர்களும் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 

இயக்குநர் வ.கௌதமன் ஈழப்பிரச்சனை பற்றியும் இந்திய அரசு செய்துவரும் வஞ்சனைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். 

அவர் பேசுகையில், செஞ்சோலை என்ற அமைப்பு ஈழத்தில் உள்ளது. இதில் போரில் பாதிப்புற்ற குடும்பத்தைச் சேர்ந்த,பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள் இருந்தனர். இவர்கள்மேல் குண்டு வீச,அந்த பிஞ்சு மழலைகள் இருந்த இடத்தை அடையாளம் காட்டியது இந்திய அரசாங்கத்தின் ரேடார் கருவிகள் ஆகும். 

பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்ல இந்தியா உதவினாலும் தமிழர்கள் இன்றுவரை இந்தியா என் தாய்நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தவர்கள் என்கின்றனர்.

அடுக்கடுக்காக உதவிகளை இந்திய அரசு இலங்கைக்குச் செய்தாலும் இந்தியப் பிரதமர் இதய அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும் பூரண குணமடைய தமிழர்கள்தான் பிரார்த்தனை செய்கின்றனர். 

இரக்கம் கொண்ட இந்த இனத்தை அழிக்க இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்யக்கூடாது. இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் தமிழ் உயிர்களை இலங்கை இராணுவம் இதுவரை கொன்றுள்ளது. 

அந்த இராணுவத்துக்கு இந்திய அரசு துணைபோவது தமிழர்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் ஒரு சிங் தூக்குத் தண்டனைக்கு நின்ற பொழுது இந்திய நாடே துடித்தது. 

ஈழத்தில் தமிழர்கள் மழையிலும் கொத்துக் குண்டுக்கு இடையிலும் காடுகளில் வாழ வேண்டியுள்ளது. காடுகளில் பாம்புக்குப் பலியாவதும் மருந்தின்றி சாவதும் அதனை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்துக்குரியது. 

உலகமே எதிர்த்தாலும் புலிகள் தமிழீழம் அமைப்பது உறுதி. ஏனென்றால் கொரில்லாப் போரில் ஈடுபட்ட எந்த போராளிகளும் இதுவரை தோற்றதில்லை. மக்களுக்கான இராணுவம் கூலிகள். மக்களே இராணுவம் புலிகள் என்றார். 

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சத்தியராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் மாணவர்களின் உடல்நிலை கண்டு வருத்தம் தெரிவித்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்.

news@tamilwin.com0 comment(s) to... “இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம் - சத்யராஜ், செல்வமணி, கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails